கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பேரணி செல்ல விவசாயிகள் முயற்சி


கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பேரணி செல்ல விவசாயிகள் முயற்சி
x
தினத்தந்தி 13 March 2021 2:33 AM IST (Updated: 13 March 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பேரணி செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பேரணி செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டத்தை திரும்ப பெறக்கோரி டெல்லியில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பிரசாரப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து புறப்பட்டு பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீஸ் முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி இந்த சைக்கிள் பயணத்திற்கு போலீசார் தடை விதித்தனர். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் தங்கியிருந்த சைக்கிள் பயண குழுவினரை கண்காணிக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
கைது
கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சைக்கிள் பயணம் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்அனுமதி இன்றி சைக்கிள் பயணம் மேற்கொள்ள இயலாது என்று அவர்களிடம் விளக்கி கூறினர். ஆனால் சைக்கிள் பயணக் குழுவினர் சட்டப்படி சைக்கிள் பேரணிக்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை என்று விவாதித்தனர்.
போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சைக்கிள் பயணத்தை கைவிட மறுத்து தடையை மீறி சைக்கிள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பரபரப்பு
தடையை மீறி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக சைக்கிள் பேரணி குழுவின் ஒருங்கிணைப்பாளர் விகாஸ் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயம் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பிரசாரப் பயணத்தை திட்டமிட்டிருந்தோம். ஆனால் போலீசார் தற்போது இந்த பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.

Next Story