உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல்
திருவாரூர், மன்னார்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருவாரூர் அருகே எட்டியலூர் பகுதியில் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஓவலிக்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் கார்த்திக் என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவாரூர் சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான பாலசந்திரனிடம் பறிமுதல் செய்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
பின்னர் பறிமுதல் ெசய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில், தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகையை மீட்பதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தை திரும்ப பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மன்னார்குடி -தஞ்சை சாலையில் மேலவாசல் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வெற்றியழகன், சிறப்பு சப்-இ்ன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற லாரியை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ராஜபாண்டி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மன்னார்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மன்னார்குடி உதவி கலெக்டருமான அழகர்சாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மன்னார்குடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story