உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து சென்ற 64 கிலோ தங்கம் ரூ.2¼ கோடி பறிமுதல்
வடுவூர் சோதனை சாவடியில் உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து சென்ற 64 கிலோ தங்கம் மற்றும் ரூ.2¼ கோடி ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வடுவூர்
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடியில் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வடுவூர் சோதனை சாவடியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது மன்னார்குடி பகுதியில் இருந்து வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த வேனில் ரூ.2 கோடியே 23 லட்சம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக வேனில் வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், அந்த பணம் தனியார் வங்கி சார்பில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்று தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சோதனை சாவடியில் மற்றொரு வேனை மறித்து தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 64 கிலோ தங்கம் எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த நகைகள், நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பெயரில் கொண்டு செல்லப்படுகிறது என வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த தங்கத்திற்கு உரிய ஆவணங்கள் இ்ல்லாததால் 64 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த ரூ.2 கோடியே 23 லட்சம் மற்றும் 64 கிலோ தங்கம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமியிடம் ஒப்படைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை சோதனைச்சாவடியில் 18 கிலோ தங்கம் மற்றும் ரூ.17 லட்சம் ஆகியவை 2 வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story