நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை-நிலை கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் ரூ.55 லட்சம் பறிமுதல்- கலெக்டர் மெகராஜ் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை  பறக்கும் படை-நிலை கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் ரூ.55 லட்சம் பறிமுதல்-  கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 13 March 2021 7:17 PM IST (Updated: 13 March 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் இதுவரை ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 80 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் இதுவரை ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 80 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சட்டசபை தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மெகராஜ் தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேவ் பிரகாஷ் பாமநாவத், அஜய் சிங், மன்தீப் சிங் பார்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் தேர்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றி, தேர்தல் நடவடிக்கைகளை சீராக நடைபெற பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
81 புகார்கள்
அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் சோதனையில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இதுவரை (நேற்று முன்தினம்) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 80 மற்றும் ரூ.12,750 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் உரிய ஆவணங்களை சமர்பித்ததன் அடிப்படையில் ரூ.20 லட்சத்து 72 ஆயிரத்து 280 சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
மேலும் சி-விஜில் செயலி மூலம் வந்த 72 புகார்களின் அடிப்படையில் பறக்கும் படையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி அழைப்பு எண் 18004257021-க்கு வந்த 9 புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் பேசினார்.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி மற்றும் பறக்கும் படையினர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story