மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1½ லட்சம் மீன் குஞ்சுகள் இறந்தன


மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1½ லட்சம் மீன் குஞ்சுகள் இறந்தன
x
தினத்தந்தி 13 March 2021 8:31 PM IST (Updated: 13 March 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1½ லட்சம் மீன் குஞ்சுகள் உணவின்றி உயிரிழந்தன.

கோவை,

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை உள்பட பல்வேறு அணைக ளில் வளர்ப்பதற்காக மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து மீன் குஞ்சு கள் ரெயிலில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

 இதன்படி மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2.5 லட்சம் மீன் குஞ்சுகள் 400 அட்டை பெட்டி களில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வர வேண்டிய அந்த ரெயில் 2 மணி தாமதமாக கோவை ரெயில் நிலையத்தை வந்தது. 

உடனே சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேகவேகமாக மீன்குஞ்சுகள் இருந்த பெட்டிகளை கீழே இறக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் 3 நிமிடம் மட்டுமே நின்ற நிலையில் அந்த ரெயில் திடீரென்று புறப்பட்டது.

இதனால் 183 பெட்டிகள் மட்டுமே இறக்கி வைக்கப்பட்டன. மீதமுள்ள 217 மீன்குஞ்சு பெட்டிகள் அந்த ரெயிலிலேயே சென்றன. இது குறித்த தகவலின் பேரில் திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நின்ற போது 217 மீன்குஞ்சு பெட்டிகளும் இறக்கப்பட்டன.

இதையடுத்து திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ரெயில் நிலையங்களில் இறக்கப்பட்ட மீன் குஞ்சுகள் பெட்டிகள் மீண்டும் கோவைக்கு மற்றொரு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெட்டிகள் நேற்று காலை கோவை வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து பெட்டிகளை திறந்து பார்த்த போது அதற்குள் இருந்த 1½ லட்சம் மீன் குஞ்சுகள் இறந்து கிடந்தன.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து அமராவதி அணையில் விடப்படு வதற்காக 2.5 லட்சம் மீன் குஞ்சுகள் ரெயில் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த மீன் குஞ்சுகள் 48 மணி நேரத்தில் கோவைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால் அந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் 3 நிமிடம் மட்டுமே நின்று சென்றதால் அனைத்து மீன் பெட்டிகளையும் இறக்க முடிய வில்லை. இதனால் ரெயிலில் இருந்து இறக்கப்பட்ட 183 பெட்டிகளில் இருந்த 1 லட்சம் மீன் குஞ்சுகள் காப்பாற்றப்பட்டன. 

மீதமுள்ள 1½ லட்சம் மீன் குஞ்சுகள் மிகவும் தாமதமாக கோவை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதால் 1½ லட்சம் மீன் குஞ்சுகள் உயிரிழந்து விட்டன. உணவு இல்லாததால் மீன் குஞ்சுகள் உயிரிழந்தது தெரியவந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story