தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.87 லட்சம் பறிமுதல்; கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
கோவில்பட்டி:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கோவில்பட்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்க கூடிய விவிபேட் எந்திரங்கள் ஆகியவற்றை கையாளுவது, வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதேபோல் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கொேரானா தடுப்பு நடவடிக்கையாக ஒரு அறைக்கு 40 பேர் வீதம் சமூக இடைவெளியுடன் அமர வைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க மண்டல அலுவலர்கள், பயிற்சியாளர்கள் தயாராக உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.41 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள், அதாவது கட்சி சின்னம் பொறித்த தொப்பிகள், கரைவேட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக எடுத்து சென்றால், வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story