அதிக பணபரிவர்த்தனை குறித்து தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவியுங்கள்
கடலூர் மாவட்டத்தில் அதிக பணபரிவர்த்தனை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கி பணியாளர்களுக்கு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கடலூர்,
சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சைலன்சமாதா இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அபய்குப்தா. மராட்டியத்தை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ், புதுடெல்லியில் இருந்து வந்த அஷிஷ் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லும் பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
பண பரிவர்த்தனை
மேலும் அச்சகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவை கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் குறித்தும் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வருமான வரித்துறையினர் மூலம் வங்கிகளில் பண பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படுகிறது.
வங்கி பணியாளர்கள், அதிக பணபரிவர்த்தனை நடைபெறும் வங்கி கணக்குகள் குறித்த விவரத்தினை உடனடியாக முன்னோடி வங்கி மேலாளர் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்திட வேண்டும். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தடுக்க, கண்காணிப்பு குழுவினர் முழு நேர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
புகார்
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட அளவில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 18004253168 என்ற எண்ணிலோ அல்லது 04142-220277, 220299 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றனர்.
இதில் மாவட்ட தேர்தல் வருமான வரித்துறை அலுவலர் நெடுமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, சப்-கலெக்டர்கள் விருத்தாசலம் பிரவின்குமார், சிதம்பரம் மதுபாலன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சரஸ்வதி, முன்னோடி வங்கி மேலாளர் அகிலன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story