கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடை, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத  கடை, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை   மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 March 2021 1:07 AM IST (Updated: 14 March 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடை, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நெல்லை:
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடை, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கொரோனா பரவல்

நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இருந்த போதிலும் அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் நெல்லை மாநகர பகுதி வணிக வளாகங்கள், கடைகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் கடைகள், வணிக வீதிகளுக்கு செல்லக்கூடாது.

நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கை கழுவும் திரவம், கிருமி நாசினி வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பஸ், கார், ஆட்டோவில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

அதேபோல் வணிக நிறுவனங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் அதிகளவு கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தின் போது சமூக இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் பாரபட்சமின்றி கடை, வணிக நிறுவனங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும். அதன் பிறகும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறினால் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நீங்கும் வரை கடை அடைக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. 

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய 9 அலுவலர்கள் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எனவே கொரோனாவை தடுக்க வணிக நிறுவனத்தார் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story