ஆலங்குளம் அருகே பாய்லர் வெடித்து வாலிபர் பலி போலீசுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்ததால் பரபரப்பு


ஆலங்குளம் அருகே  பாய்லர் வெடித்து வாலிபர் பலி  போலீசுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 March 2021 1:29 AM IST (Updated: 14 March 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே பாய்லர் வெடித்து வாலிபர் பலியானார். போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே பாய்லர் வெடித்து வாலிபர் பலியானார். போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வல்கனைசிங் கடை உரிமையாளர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் மகன் கார்த்திக் (வயது 35). இவர் அப்பகுதியில் வல்கனைசிங் கடை நடத்தி வந்தார். மேலும் இவருக்கு சொந்தமான குடோன், ஆலங்குளம்-புதுப்பட்டி ரோடு பகுதியில் உள்ளது. இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவில் கார்த்திக் தனது குடோனில் வாகனங்களின் டயர்களுக்கு வல்கனைசிங் மூலம் பட்டன் அமைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மற்ற தொழிலாளர்கள் குடோனுக்கு வௌியில் நின்று கொண்டிருந்தனர்.

பாய்லர் வெடித்து பலி

அப்போது குடோனில் இருந்த பாய்லர் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் உடல் கருகிய கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், இதுகுறித்து கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்திக் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அவரது உடலை குடும்பத்தினர் மயானத்துக்கு எடுத்து சென்று தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதனை அறிந்த ஆலங்குளம் போலீசார், இதுதொடர்பாக கார்த்திக்கின் குடும்பத்தினர், உறவினர்கள், தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஆலங்குளத்தில் பாய்லர் வெடித்து பலியான வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story