திருச்சி அரசு ஆஸ்பத்திாியில் கடந்த ஓராண்டில் 3¾ லட்சம் கொரோனா பரிசோதனைகள்
திருச்சி அரசு ஆஸ்பத்திாியில் கடந்த ஓராண்டில் 3¾ லட்சம் கொரோனா பரிசோதனைகள்
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 3¾ லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு
உலகநாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் பல மாநிலங்களில் விஸ்வரூபத்தை காட்டியது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படிப்படியாக இயல்புநிலை திரும்பியது.
தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் தினமும் சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பின்னர் தாக்கம் படிப்படியாக குறைந்து கொரோனா பாதிப்பு தினமும் 10 பேருக்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் வந்தது. கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. திருச்சி மாவட்டத்திலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
2-வது அலை உருவாகுமா?
இந்தநிலையில் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் 2-வது கொரோனா அலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஓராண்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 5 முதல் 10 பேர் வரை பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
தினமும் 2 ஆயிரம் பரிசோதனைகள்
இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் தினமும் சராசரியாக 10 பேருக்கும் கீழ் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வருகிறது. ஆனாலும் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர். இதனால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்காமல் போட்டு வருகிறோம்.
தினமும் 2 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 1,500 ஆனது. தற்போது மீண்டும் தினமும் 2 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் பரிசோதனைகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story