திருச்சி பொன்மலை பணிமனையில் பெண்களின் பங்களிப்போடு வேகன்கள் தயாரிப்பு
திருச்சி பொன்மலை பணிமனையில் பெண்களின் பங்களிப்போடு வேகன்கள் தயாரிக்கப்பட்டன.
பொன்மலைப்பட்டி,
திருச்சி பொன்மலை பணிமனையில் உற்பத்தி செய்யப்பட்ட 500-ஆவது வேகன் மற்றும் முதல் தொகுப்பு பி.எல்சி.எஸ் 2 அடுக்கு கன்டெய்னர் வேகன்கள் பணிமனையில் உள்ள பெண்களின் பங்களிப்போடு செய்து முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் தின கொண்டாட்டமாக நேற்று பி.எல்.சி.எஸ். வேகன்களின் முதல் தொகுப்பு நிறைவடைந்ததை நினைவு கூறும் வண்ணம் இப்பணிமனையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 10 பெண் அதிகாரிகள், பொறியாளர்கள், குமாஸ்தாக்கள் மற்றும் தொழிலாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், திருச்சி ெரயில்வே டிவிஷனைச் சேர்ந்த மகளிர் லோகோ ஓட்டுனர்கள் ஜான்சிராணி மற்றும் குமாரி நந்தினி, மகளிர் லோகோ ஆய்வாளர் நாராயண வடிவு, மகளிர் கார்டு குமாரி நீலாதேவி ஆகியோர் இந்த புதிய வேகன்களை இயக்கினர். முன்னதாக முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் மற்றும் மூத்த அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர். இவ்விழாவில கலந்து கொண்ட அனைத்து பெண் ஊழியர்கள் சிறப்புப்பலகையில் கையெழுத்திட்டு தங்கள் உறுதியைக் காண்பித்தது முக்கியமான நிகழ்வாகும். இந்த கையொப்பமிட்ட சிறப்பு அட்டை பணிமனையில் நினைவுப்பொருளாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்திய கொள்கலன் கார்ப்பரேஷன் வழங்கிய புதிய 1035 வேகன் ஆர்டரின் ஒரு பகுதியாக இந்த முதல் வேகன்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story