வேலூர்; முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு-கலெக்டர் அதிரடி உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகையை அதிகரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகையை அதிகரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
உலக அளவில் கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் அதிகரித்து விட்டன. வேலூர் மாவட்டத்திலும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) ஒரேநாளில் மாவட்டத்தில் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2-வது அலை ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. எனவே நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். ஓட்டலில் பணியாற்றுபவர்கள், வியாபாரிகள் பஸ் கண்டக்டர்கள் போன்ற அதிக மக்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மார்க்கெட் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதில் பரவல் குறித்து ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்கும். இதுதவிர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது மக்களுக்கு அலட்சியம் ஏற்பட்டு உள்ளது. எனவே கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
அபராதம் அதிகரிப்பு
முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராத தொகையை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே ரூ.200 ஆக இருக்கும் அபராதம் இனி மோட்டார்சைக்கிளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.250-ம், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதத்தை அதிகரிக்க வேண்டும்.
தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களையும் கண்காணிக்க வேண்டும். அக்கூட்டங்கள் மூலமும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.
நடமாடும் குழுக்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நகர்நல அலுவலர் சித்ரசேனா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story