தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஈரோடு மாவட்டத்துக்கான திட்டங்கள்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஈரோடு மாவட்டத்துக்கான திட்டங்கள் விவரம் வருமாறு:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஈரோடு மாவட்டத்துக்கான திட்டங்கள் விவரம் வருமாறு:-
மூலிகை பண்ணை
பெருந்துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் உபரி நீரை கொண்டு சென்று ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்பி நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோல் மற்றும் சாய தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் காலிங்கராயன் கால்வாயில் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தாளவாடியில் மூலிகை பண்ணை அமைக்கப்படும். குரங்கன்பள்ளம் விவசாய நிலங்கள் மற்றும் ‘தாராபுரம் கட்டில்’ நீக்கப்பட்ட நிலங்கள் கீழ்பவானி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் கொண்டு வர ஆவன செய்யப்படும். ஈரோடு ஊத்துக்குளி, நல்லாம்பட்டி, தாளவாடி ஆகிய பகுதிகளில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
புதிய அணை
அந்தியூரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மணியாச்சி, வரட்டுப்பள்ளம், வழுக்குப்பாறை ஆறுகளை இணைத்து அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் நீர்ப்பாசன வசதிகள் பெருக்கப்படும். வேதப்பாறை நீர்த்தேக்க திட்டம் செயல்படுத்தப்படும். அந்தியூர் அருகே பட்லூரில் புதிய அணை கட்ட ஆவன செய்யப்படும்.
அந்தியூர், பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டியில் தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைப்படும். தாளவாடி, சத்தியமங்கலம் (கடம்பூர்), அந்தியூர் (பர்கூர்) ஆகியன மலை பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைப்பணி படிகள் வழங்கப்படும். பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும்.
புற்றுநோய் சிகிச்சை பிரிவு
ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புற்றுநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும். அம்மாபேட்டை, குருவரெட்டியூர், குறிச்சி, ஒலகடம், மொடக்குறிச்சி, உக்கரம், எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். ஈரோட்டில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு நீர் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஈரோட்டில் உணவு பூங்காவும், மொடக்குறிச்சியில் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும். மொடக்குறிச்சியில் பாலிடெக்னிக் கல்லூரியும், ஈரோட்டில் அரசு வோண்மை கல்லூரியும், அந்தியூரில் அரசு கலை கல்லூரியும் தொடங்கப்படும்.
நறுமண தொழிற்சாலை
பாண்டியாறு -புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும். ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும். ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தியூர், பவானி பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை பெருக்குவதற்காக தோணிமடுவு பாசன திட்டம் நிறைவேற்றப்பட ஆவன செய்யப்படும்.
சத்தியமங்கலத்தில் நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும். சுதந்திர போராட்ட வீரரும், தீரன் சின்னமலையின் தளபதிகளில் ஒருவருமான பொல்லானுக்கு ஓடாநிலை அருகே ஜெயராமபுரத்திலும், வல்வில் ஓரிக்கும் கொல்லிமலையிலும் நினைவு மண்டபங்கள் கட்டப்படும்.
குப்பை வரி நீக்கம்
பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும். புங்கம்பாடியில் கால்நடை மருத்துவமனை தொடங்கப்படும். உள்ளாட்சிகளில் தனியாக வசூலிக்கப்படும் குப்பை வரி நீக்கப்படும். விசைத்தறி தொழிலில் ஏற்பட்டு உள்ள தேக்க நிலையை சரிசெய்ய மத்திய அரசுடன் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு நகரில் தற்போது ஏற்பட்டு உள்ள போக்குவரத்து நெரிசலையும், எதிர்காலத்தில் ஏற்பட போகும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு காளை மாடு சிலையில் இருந்து பஸ் நிலையம் செல்ல நால்ரோடு அரசு மருத்துவமனை வழியாகவும், பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு வழியாகவும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
Related Tags :
Next Story