துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை


துணை ராணுவத்தினர்  தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 14 March 2021 2:30 AM IST (Updated: 14 March 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படை வீரர்கள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை,

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படை வீரர்கள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்)6-ந்தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது தேர்தல் விழா களை கட்டி உள்ளது. பல்வேறு கட்சியில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்தல் மற்றும் அன்பளிப்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல்நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

வாகன சோதனை

இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து நகருக்குள் வரும் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை பறக்கும் படை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து தீவிரமாக சோதனை நடத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு வாகனங்களில் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம், அன்பளிப்பு பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை அந்தந்த பகுதியில் உள்ள கருவூலம் அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

துணை ராணுவத்தினர்

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக பீகார், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு ஏராளமான துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாருடன் இணைந்து இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை-திருப்பத்தூர் பைபாஸ் சாலை, மானாமதுரை-பரமக்குடி சாலை, திருப்புவனம்-பூவந்தி சாலை, திருப்பத்தூர்-சிவகங்கை பைபாஸ் சாலை, காரைக்குடி அருகே கோவிலூர் வாகன சோதனைச்சாவடி  உள்ளிட்ட ஏராளமான பகுதியில் துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 4 சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் துணை ராணுவ வீரர்கள் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். தற்போது போலீசாருடன் இணைந்து துணைராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுகிறதா? என கண்காணிக்கப்படுகிறது.

Next Story