வாக்குப்பதிவு மையங்களை குமரி கலெக்டர் ஆய்வு
வாக்குப்பதிவு மையங்களை குமரி கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வாக்கு பதிவு மையங்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும், 6 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஆகியவை வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு, பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பூதப்பாண்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை சரிபார்க்கும் எந்திரமான வி.வி.பேட் கருவி ஆகியவை வைக்கப்பட்டுள்ள பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகம், பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
விழிப்புணர்வு பிரசார பயணம்
மேலும் பூதப்பாண்டியிலுள்ள வாக்குப்பதிவு மையங்களான ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் சர்.சி.வி. நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு நேரில் சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள், அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை, மின்விளக்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளங்கள் அமைத்திடவும் தேவையான மாற்றங்களை செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், வாக்குச் சாவடி அலுவலர்களையும் வலியறுத்தினார். வாக்குப்பதிவு தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள் குறித்து தேவையான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து கலைமாமணி பழனியாப்பிள்ளை தலைமையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை தொகுதி பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று, வாக்குப்பதிவு செய்யும்வரை அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை எடுத்துக்கூறும் வகையிலான விழிப்புணர்வு பிரசார பயணத்தை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், தோவாளை தாசில்தார் ஜூலியன் ஜீவர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், தேர்தல் தாசில்தார் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story