லாரி மோதி வங்கி மேலாளர் பலி
தக்கலை அருகே டேங்கர் லாரி மோதியதில், தனியார் வங்கி மேலாளர் பலியானார். இந்த பரிதாப சம்பவம் நண்பர் கண் எதிரே நடந்தது.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே டேங்கர் லாரி மோதியதில், தனியார் வங்கி மேலாளர் பலியானார். இந்த பரிதாப சம்பவம் நண்பர் கண் எதிரே நடந்தது.
தனியார் வங்கி மேலாளர்
தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38), இவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்ததும் நாகர்கோவிலில் இருந்து தக்கலைக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். பின் இருக்கையில் அவர் நண்பர் சுயம்புராஜன் உட்கார்ந்து பயணம் செய்தார்.
டேங்கர் லாரி மோதியது
தக்கலை கொல்லன்விளை பகுதியை கடந்து சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த கியாஸ் டேங்கர் லாரி மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட பிரபு டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நண்பரின் கண் எதிரில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கியாஸ் டேங்கர் லாரி டிரைவர் கள்ளகுறிச்சி அருகே சின்னசேலம் பகுதியை சேர்ந்த சக்தி (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபுவுக்கு நாகேஷ்வரி (30) என்ற மனைவியும், தேவ்சாகா என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். தற்போது நாகேஷ்வரி கர்ப்பிணியாக உள்ளார். அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
கண்காணிப்பு கேமரா பதிவு
விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது காண்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.
Related Tags :
Next Story