திருக்காட்டுப்பள்ளி ஏ.டி.எம்.மையத்தில் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
திருக்காட்டுப்பள்ளி ஏ.டி.எம். மையத்தில் விவசாயிக்கு உதவி செய்வது போல் நடித்்து நூதன முறையில் ரூ.50 ஆயிரம் திருட்டு நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி ஏ.டி.எம். மையத்தில் விவசாயிக்கு உதவி செய்வது போல் நடித்து நூதன முறையில் ரூ.50 ஆயிரம் திருட்டு நடைபெற்றது.
விவசாயி
திருக்காட்டுப்பள்ளியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 11-ந்தேதி திருக்காட்டுப்பள்ளி யை சேர்ந்த விவசாயியான பூவலிங்கம் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் தனது கார்டை செலுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்தார். விவசாயிக்கு உதவி செய்வது போல் நடித்து அவரது ஏ.டி.எம். கார்டை வாலிபர் வாங்கி எந்திரத்தில் செலுத்தி பணம் வரவில்லை என்று கூறினார். பின்னர் கார்ட்டை விவசாயிடம் கொடுத்து விட்டு வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ரூ.50 ஆயிரம் திருட்டு
சில நிமிடங்களில் பூவலிங்கத்தின் செல்போனுக்கு 5 முறை ரூ.10 ஆயிரமாக ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாலிபர் நூதன முறையில் ரூ.50 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது. உடனடியாக விவசாயி வங்கிக்கு வந்து தனது கணக்கை முடக்கினார். அப்போது வங்கி ஊழியர் மர்மநபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்டு அவரை திருப்பி அனுப்பினார். இதுகுறித்து பூவலிங்கம் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூதனமுறையில் விவசாயிடம் ரூ.50 ஆயிரத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story