சூலூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.10¾ லட்சம் பறிமுதல்
சூலூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.10¾ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
கருமத்தம்பட்டி,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தொகுதி வாரியாக பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூலூரை அடுத்த கள்ளப்பாளையம் அருகே நேற்று மாலை பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கவுசிக் (வயது 35) என்பவரிடம் ரூ.10 லட்சத்து 81 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது, கவுசிக் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் தான் பீடம்பள்ளி பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பதாகவும், வங்கி விடுமுறை என்பதால் பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி மற்றும் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கவுசிக்கை சூலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் ரூ.10¾ லட்சத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் பறக்கும் படையினர் சிந்தாமணிபுதூர் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், முகமது நசீர் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது.
இதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி ஞானபிரகாசம் மற்றும் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் சூலூர் தொகுதியில் ரூ.11¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story