ஓமலூரில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை: அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை


ஓமலூரில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை: அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை
x
தினத்தந்தி 14 March 2021 6:47 PM IST (Updated: 14 March 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

சேலம்:
அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று ஓமலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பிரசாரம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலம் வந்தார். பின்னர் அவர் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர் சித்ராவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 
இதன் பின்னர் கெங்கவல்லி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பிக்கு தம்மம்பட்டி பகுதியிலும், ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆத்தூரிலும் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து தங்கினார்.
உற்சாக வரவேற்பு
இந்த நிலையில், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். முதலில் சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடனும், அதன்பிறகு புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வெற்றி பெறச்செய்ய வேண்டும்
கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, நிர்வாகிகள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் அனைவரும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணி ஆற்ற வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட நிறைய நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமையிடம் மனு அளித்து இருப்பீர்கள். ஆனால் உங்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் சோர்வடைய வேண்டாம். அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும். எனவே வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றுங்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 
கூட்டத்தில் அமைப்புச்செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பொன்னையன், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாஜலம், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன் மற்றும் மாநகர, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சரிடம் வாழ்த்து
முன்னதாக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் பா.ம.க. வேட்பாளர்கள் அருள், சதாசிவம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் புதுச்சேரியில் தற்ேபாதைய எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி, பாஸ்கர், அன்பழகன், அசனா ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். 
மேலும் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேலம் மேற்கு பா.ம.க. வேட்பாளர் அருள், மேட்டூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Next Story