கும்மிடிப்பூண்டியில் நிலைதடுமாறிய மாநகர பஸ் தரைப்பாலத்தில் இருந்து இறங்கியது - அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் காயமின்றி தப்பினர்
கும்மிடிப்பூண்டியில் நிலைதடுமாறிய மாநகர பஸ் தரைப்பாலத்தில் இருந்து இறங்கிய விபத்தில் அதிஷ்டவசமாக 50 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
மாதவரம் பணிமனையை சேர்ந்த தடம் எண்-557 கொண்ட மாநகர பஸ், சென்னை அடுத்த செங்குன்றத்தில் இருந்து நேற்று காலை 8.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை நெல்வாய் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (வயது 34) ஓட்டினார். கண்டக்டராக செங்குன்றத்தை சேர்ந்த மதன் (54) என்பவர் பணியில் இருந்தார்.
இந்த நிலையில், அந்த பஸ் கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய துணை மின்நிலையம் அருகே உள்ள தரைப்பாலத்தின் மீது வந்த போது, திடீரென குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததால் தடுமாறிய பஸ் டிரைவர் பாஸ்கர், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டு நிறுத்தி உள்ளார்.
இதனையடுத்து, கட்டுபாட்டை இழந்த அந்த பஸ்சின் சக்கரம் தரைப்பாலத்தின் வலது புறம் பள்ளத்தில் இறங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். இந்த நிலையில், தரைப்பாலத்தின் பக்கவாட்டில் இருந்த சிமெண்ட் தடுப்புகளின் மீது பஸ் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்சில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் கும்மிடிப்பூண்டி பஜாரில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story