மரக்காணம் அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
மரக்காணம் அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தாழங்காடு சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கூண்டு வைத்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அட்டைப் பெட்டிகளில் பிரெட் பாக்கெட்டுகள் இருந்தன. இருப்பினும் சந்தேகம் தீராத போலீசார் அதனை அகற்றி அடியில் வரை சோதனை செய்தனர். இதில் பிரெட் பாக்கெட்டுகளுக்கு அடியில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு வினியோகம்?
லாரியை முழுமையாக சோதனை செய்தபோது 89 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 8,900 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது. மது பாட்டில்கள் கடத்தல் தொடர்பாக லாரியை ஓட்டிவந்த சத்தியநாராயணன் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக புதுவையில் இருந்து குறைந்த விலை மதுபாட்டில்களை வாங்கி கடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில் சென்று, போலீசாரை பாராட்டினார்.
Related Tags :
Next Story