வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 15 March 2021 12:48 AM IST (Updated: 15 March 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் நடந்தது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சியில் ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமை தாங்கி பேசும்போது, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய விதிமுறைகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மாதிரி வாக்குப்பதிவு

தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்குப்பதிவு நடைபெறும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதிக்கு முன்னதாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டு போடுவதற்கான பொருட்கள் அனுப்பப்படும்.

இதனை அலுவலர்கள் சரிபார்த்து வாக்குச்சாவடியில் மேஜைகள், இருக்கைகள் போட்டு எந்திரங்களை பொருத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். 

இதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என உறுதி செய்யப்படும். பின்னர் மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, தேர்தல் அன்று வாக்குப்பதிவு நடக்கும்.

டோக்கன் மூலம்...

வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கவும், ஓட்டு போடுபவர்கள் கையில் அழியாத மை வைக்கவும் வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் குளோஸ் பட்டனை அழுத்தி சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். 

வாக்குப்பதிவு நேரத்துக்கு பின்னர் வரிசையில் நிற்பவர்களை டோக்கன் மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம். மேலும் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகளை குறித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பயிற்சியில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,700 பேர் கலந்துகொண்டனர்.


Next Story