மாணவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று


மாணவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 March 2021 1:42 AM IST (Updated: 15 March 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் அருகே, விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழப்பழுவூர்:

4 பேருக்கு கொரோனா
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள சுண்டக்குடி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளியையொட்டி உள்ள விடுதியில் தங்கியும் மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த விடுதி வார்டன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் விடுதி சமையலர்கள் 2 பேரும், அந்த விடுதியில் தங்கி பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு பரிசோதனை
பள்ளி மாணவர், வார்டன், சமையலர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு சென்ற சுகாதாரத் துறை அலுவலர்கள், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் வார்டன் மற்றும் சமையலர்களின் குடும்பத்தினருக்கும் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் வகுப்புக்கு வருவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பாடங்களை ஆன்-லைன் மூலம் நடத்த வேண்டும். பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Next Story