கடம்பூர் அருகே விறகு பொறுக்கச் சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது
கடம்பூர் அருகே விறகு பொறுக்கச் சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே விறகு பொறுக்கச் சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது.
யானை மிதித்தது
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட குன்றியை சேர்ந்தவர் மாதேவன். அவருடைய மனைவி நாகரத்தினம் (வயது 49). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நாகரத்தினம் அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களுடன் நேற்று காலை வனப்பகுதியை ஒட்டிய பகுதிக்கு சென்று விறகு பொறுக்கி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்கு வந்து நின்று பிளிறியது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு 4 பேரும் அங்கிருந்து ஓடினார்கள். உடனே யானை அவர்களை துரத்த தொடங்கியது. இதில் மற்ற 3 பெண்களும் தப்பித்துவிட்டனர். நாகரத்தினம் மட்டும் யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை யானை துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதில் உடல் நசுங்கிய நிலையில் நாகரத்தினம் அலறி துடித்தார்.
பெண் சாவு
இதை பார்த்த மற்ற 3 பெண்களும் ஊருக்குள் சென்று உறவினர்களிடம் கூறினார்கள். அதைத்தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த நாகரத்தினத்தை மீட்டார்கள். பின்னர் தனியார் ஆம்புலன்சசை வரவழைத்து, அதில் அவரை ஏற்றி வனப்பகுதியை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்குள் நாகரத்தினம் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து கடம்பூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விறகு பொறுக்க சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்ற சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story