தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ


தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 15 March 2021 2:31 AM IST (Updated: 15 March 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.

தாளவாடி
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படுவது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். இது ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சியில் உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது.
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது. ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட கொங்கள்ளி வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் காட்டு தீ பற்றியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர், தாளவாடி வனச்சரகங்களை சேர்ந்த வன ஊழியர்கள் மற்றும் ஆசனூர் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது.

Next Story