கடலூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கீடு
அ.ம.மு.க. வேட்பாளர் இன்று(திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், கடலூர் தொகுதி திடீரென தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதையடுத்து அவர் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதற்கிடையில் அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி நேற்று உறுதியாகி, தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கடலூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை அறிந்த மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் பாடலீஸ்வரன், ராஜராஜன், சேதுராமன், செல்வம், அருள்செல்வம், பேரூர் கழக செயலாளர்கள் பிரவீன்குமார், பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி சாலையில் போராட்டம் நடத்த திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை.
பின்னர் இது பற்றி மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாடலீஸ்வரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாவட்ட செயலாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது பற்றி பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முறைப்படி அறிவித்தார். ஆனால் மண்டல பொறுப்பாளரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.கே.பாலமுருகன் தலையிட்டு, கடலூர் தொகுதியை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி உள்ளார். அதனால் தான் கடலூர் தொகுதி மாற்றப்பட்டு உள்ளது.
அடுத்தக்கட்ட முடிவு
குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் மக்களுக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு தகவல் அனுப்பி உள்ளோம். அவர் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகு அடுத்தக்கட்ட முடிவு பற்றி அறிவிப்போம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story