ஈரோட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு- பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்; மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது
ஈரோட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமையில் நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, லாரி, கார், ஆட்டோ, மினிபஸ், மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், காய்கறி வியாபாரிகள் சங்கம், ஆயில் நிறுவன உரிமையாளர்கள், முடிதிருத்துவோர் சங்கம், குறு, சிறு தொழில் உரிமையாளர்கள் உள்ளிட்ட நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகளுடன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக கவசம்
அதன்படி பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் உள்பட தங்களது நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறை
மேலும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு வரும் ஒவ்வொரு நபருக்கும் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்பு அனுமதிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பட்சத்தில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் படி, அபராதம் மற்றும் கடைகள் மூடி சீல் வைக்கப்படுவதோடு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, தனித்துணை கலெக்டர் குமரன், ஈரோடு மாநகர் நல அலுவலர் முரளிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story