சென்னை மண்ணடியில் சோகம் தண்ணீர் வாளிக்குள் தவறிவிழுந்த 1½ வயது குழந்தை பலி
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை, மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்த சம்பவம், சென்னை மண்ணடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
1½ வயது குழந்தை
சென்னை மண்ணடி சுப்புபிள்ளை தெருவில் வசித்து வருபவர் குமரேசன் (வயது 24). இவர், சென்னை துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (21). இவர்களுக்கு 1½ வயதில் இனியாசி என்ற பெண் குழந்தை இருந்தது.நேற்று முன்தினம் மாலை குமரேசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் படுத்து தூங்கிவிட்டார். வீட்டில் குழந்தை இனியாசி விளையாடிக்கொண்டு இருந்தது. இதற்கிடையில் கலைவாணியும் கண் அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது.
தண்ணீர் வாளிக்குள் விழுந்ததுவீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, குளியல் அறைக்குள் சென்று விட்டது. அங்கு வாளியில் தண்ணீர் பிடித்து நிரப்பி வைத்து இருந்தனர். தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இனியாசி, திடீரென தண்ணீர் நிறைந்த வாளிக்குள் தலைகுப்புற விழுந்துவிட்டது.
இதற்கிடையில் கலைவாணி, திடீரென எழுந்து பார்த்தபோது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த தனது குழந்தை மாயமாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீடு முழுவதும் தேடிய அவர், பின்னர் குளியல் அறைக்குள் சென்று பார்த்தபோது, தனது குழந்தை தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து கிடப்பதை கண்டு அலறினார்.
உயிரிழந்ததுமனைவியின் அலறல் சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட குமரேசன் ஓடிவந்தார். பின்னர் குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை இனியாசி ஏற்கனவே தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து கணவன்-மனைவி இருவரும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.