கொடுங்கையூரில் கட்டிடத்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை; போலீசில் சகதொழிலாளி சரண்
கட்டிடத் தொழிலாளியை தலையில் கல்லால் அடித்துக்கொலை செய்த சக தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.
கட்டிடத்தொழிலாளி
சென்னை கொடுங்கையூர் வாசுகி நகர் 5-வது தெருவில் வசிக்கும் கவிதா என்பவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதன் கட்டுமான பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் ஜனா (வயது 41) மற்றும் துக்குனாசாகு (33) வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் அங்கேயே தங்கி, பகலில் கட்டிடத்தொழிலாளியாகவும், இரவில் அங்கு காவலாளியாகவும் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு துக்குனாசாகு, காவலாளி பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது பிரசன்னகுமார் ஜனா, தனது நண்பர்கள் 3 பேரை அங்கு அழைத்து வந்தார். பின்னர் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்துக்குள் வைத்து நண்பர்களுடன் அமர்ந்து அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
கல்லால் அடித்துக்கொலைகாவலாளி பணியில் இருந்த துக்குனாசாகு இதனை தட்டிக்கேட்டார். வெளியாட்களை ஏன் இங்கு அழைத்து வந்து மது குடிக்கிறாய்? என கண்டித்தார். இதனால் கட்டிடத்தொழிலாளிகளான இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரசன்னகுமார் ஜனா, துக்குனாசாகுவை தாக்கியதாக தெரிகிறது.
பின்னர் பிரசன்னகுமார் ஜனா தூங்க சென்றுவிட்டார். தன்னை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த துக்குனாசாகு, சிறிது நேரம் கழித்து அங்கு குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த பிரசன்னகுமார் ஜனாவின் தலையில் அங்கு கிடந்த கல்லால் அடித்துக்கொலை செய்தார்.
போலீசில் சரண்இதையடுத்து நேற்று அதிகாலையில் துக்குனாசாகு, கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பிரசன்னகுமார் ஜனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்டிடத்தொழிலாளியை கல்லால் அடித்துக்கொலை செய்ததாக சரண் அடைந்த சக தொழிலாளியான துக்குனாசாகுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.