பாகிஸ்தான் போரில் வென்ற 50-ம் ஆண்டு விழா: ராணுவ வீரர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி
பாகிஸ்தான் போரில் இந்தியா வென்ற 50-ம் ஆண்டு விழாவை யொட்டி கோவையில் நேற்று ராணுவ வீரர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்தது.
கோவை
பாகிஸ்தான் போரில் இந்தியா வென்ற 50-ம் ஆண்டு விழாவை யொட்டி கோவையில் நேற்று ராணுவ வீரர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்தது.
50-ம் ஆண்டு விழா
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் 50-ம் ஆண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியில் இருந்து 4 வெற்றி ஜோதிகளை பிரதமர் ஏற்றி வைத்தார்.
அது நாட்டின் 4 திசைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதில் ஒரு வெற்றி ஜோதி கடந்த வாரம் கோவை வரப்பட்டது. அதற்கு முப்படை வீரர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அந்த போரில் பங்கேற்ற கோவை, நீலகிரி, திருப்பூர், கேரளாவை சேர்ந்த 150 வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மாரத்தான் போட்டி
இந்த நிலையில், முப்படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள், தேசிய மாணவர் படையினர், பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இதை ஐ.என்.எஸ். அக்ரானி கமோடர் அசோக் ராய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கி கோவை -திருச்சி ரோடு வழியாக அரசு கலைக்கல்லூரியில் முடிந்தது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் என்.சி.சி. குருப் கமாண்டர் கர்னல் கிரிஷ் பார்த்தன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த வெற்றி ஜோதி கேரள மாநிலம் கொச்சின் கடற்படை அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓவிய போட்டி
இதையொட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதையொட்டி போர் வெற்றி ஜோதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கர்ணல். எல்.சி.எஸ்.நாயுடு, கர்ணல் ஜே.பி.எஸ்.ஜான், கிரிஷ்பர்தான், அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா, அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர்படை பிரிவு தலைவர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய மாணவர் படையினர் வரைந்த சிறந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story