தேவாலா பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகள்
தேவாலா பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகள்
கூடலூர்
தேவாலா பஜாரில் கால்நடைகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
தேவாலா பஜார்
கூடலூர்-கேரளாவை இணைக்கும் சாலையில் மரப்பாலம், நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட முக்கிய பஜார்கள் உள்ளது. கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய சாலையாக இருப்பதால் ஏராளமான சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர பந்தலூர் தாலுகா மக்கள் தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள கூடலூருக்கு வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர்- பந்தலூரை இணைக்கும் முக்கிய பகுதியாக தேவாலா பஜார் விளங்குகிறது. சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வந்து செல்வதால் நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.
விபத்து
இதனிடையே போக்குவரத்து நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் சமீபகாலமாக கால்நடைகள் சாலையில் அதிகளவு சுற்றி வருகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தொடர்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
காலையில் மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகள் இரவு வரை சாலையில் உலா வருகிறது. பஜாரில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை சாப்பிடுவதற்காக கால்நடைகள் அதிகளவு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தேவாலா பஜாரில் இடநெருக்கடி பல ஆண்டுகளாக உள்ளது. குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதி கிடையாது. இதனால் மக்கள் நடமாட்டத்தையும் தவிர்க்க முடியவில்லை.
இதற்கு இடைப்பட்ட சமயத்தில் கால்நடைகளும் அதிகளவு சாலையில் உலா வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story