நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு


நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 15 March 2021 8:06 PM IST (Updated: 15 March 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:

பழனி அருகேயுள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள், நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். 
மேலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மனுவை பெட்டியில் போட்டுவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
 இதையடுத்து விவசாயிகள் மனுவை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஆண்டிப்பட்டி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு இருந்தோம். 
ஆனால், நெற்பயிர்கள் அனைத்தும் விளைச்சல் அடையாமல் பதராக மாறிவிட்டது. இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கிறோம். 
எனவே, எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மீண்டும் நெல் பயிரிடுவதற்கு குதிரையாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
நிவாரணம் வேண்டும் 
இதை வலியுறுத்தி ஏற்கனவே 4 முறை மனு கொடுத்து விட்டோம். ஆனால், இதுவரை நிவாரணம் வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
மேலும் குதிரையாறு அணையில் இருந்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்காமல், வேறு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளோம். 

எனவே, பாதிக்கப்பட்ட 200 விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதோடு, குதிரையாறு அணையில் இருந்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story