உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
போடிப்பட்டி, மார்ச்.16-
உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாவாரி சாகுபடி
உடுமலையையடுத்த ராகல்பாவி, கணபதிபாளையம், முக்கோணம், புக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மானாவாரி மற்றும் இறவைப் பாசனத்தில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நடப்பு ஆண்டில் பருவம் தவறிப் பெய்த மழையால் கடும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது.எனவே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கொண்டைக்கடலை எனப்படும் பனிக்கடலை சாகுபடிக்கு உகந்த பருவம் கார்த்திகைப் பட்டமாகும். ஏனென்றால் அதிக அளவில் பனிப்பொழிவு உள்ள மார்கழி மாதத்தில் பூக்கள் பிடித்து நன்கு செழித்து வளர்வதால் தான் இதற்கு பனிக்கடலை என்று பெயர் வந்தது. ஆனால் இந்த ஆண்டு பனி பெய்ய வேண்டிய மார்கழி மாதத்தில் தொடர்ச்சியாக மழை பெய்தது.இதனால் பூக்கள் உதிர்ந்தும் பயிர்கள் அழுகியும் பெருமளவு சேதம் ஏற்பட்டது.
அறுவடை எந்திரம்
ஒரு ஏக்கருக்கு உழவு, உரம், மருந்து, கூலி என்று ரூ 25 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளோம்.அத்துடன் தற்போது அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனால் எந்திரங்கள் உதவியுடன் அறுவடை செய்துள்ளோம்.பெரிய ரக அறுவடை எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 வாடகை கொடுக்கிறோம். இதுதவிர உதவியாட்கள், விளைநிலத்திலிருந்து உலர் களம் அல்லது விற்பனை மையத்துக்கு கொண்டு செல்லும் செலவு என்று அதிக செலவு பிடிக்கிறது. ஆனால் மிகக்குறைந்த அளவு மகசூல் கிடைத்துள்ளதால் அறுவடைச்செலவு கூட கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது. 85 முதல் 95 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய கொண்டைக்கடலையில் மானாவாரி சாகுபடி மேற்கொள்ளும்போது 400 முதல் 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் 150 கிலோவுக்கும் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடைப் பணிகளை வேளாண்துறையினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story