ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை; சொத்து பட்டியலில் பரபரப்பு தகவல்
போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை என்று சொத்து விவர பட்டியலில் தெரிவித்துள்ளார்.
தேனி:
போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை என்று சொத்து விவர பட்டியலில் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர், கடந்த 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலின் போது தனது சொத்து விவரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை. நேற்று அவருடைய சொத்து பட்டியல், போடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அந்த சொத்து பட்டியலில் தனது பெயரில் நிலம், வீடு போன்ற அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கையிருப்பு ரூ.23 ஆயிரத்து 500, வங்கி இருப்பு ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698, ரூ.48 லட்சத்து 85 ஆயிரத்து 424 மதிப்பில் 3 வாகனங்கள், ரூ.67 ஆயிரத்து 440 மதிப்பில் 16 கிராம் நகைகள், பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் ரூ.100 பங்குத்தொகை என அசையும் சொத்துகளாக ரூ.61 லட்சத்து 19 ஆயிரத்து 162 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அவர் தனக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 கடன் உள்ளதாகவும், அது தனது மனைவியிடம் வாங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
5 மடங்கு உயர்வு
ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் ரூ.4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 415 மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மனைவிக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 746 மதிப்பில் கடன் உள்ளதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு ரூ.33 லட்சத்து 20 ஆயிரத்து 529 மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.25 லட்சத்து 734 மதிப்பில் கடன் இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
அதே நேரத்தில் 2016-ம் ஆண்டு அவருடைய மனைவி பெயரில் ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்து 545 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.98 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் மனைவியின் சொத்து மதிப்பு 5 மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது. மனைவிக்கான வருமானம் விவசாயத்தின் மூலம் கிடைத்ததாகவும் அவர் தனது சொத்து பட்டியலில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story