தேனி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி
தேனி அருகே மனைவி கண்முன் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தேனி:
போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் பாண்டி (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது மனைவி செல்வியுடன் நேற்று தேனிக்கு ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அவர்கள் தேனியில் இருந்து போடிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தேனி அருகே போடி விலக்கு என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது, பின்னால் தேனியில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஸ்கூட்டரில் வந்த கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின் சக்கரத்தில் பாண்டி சிக்கினார். இதில், அவரது தலை மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாண்டி பரிதாபமாக இறந்துபோனார். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தனது கண்முன் கணவர் இறந்துபோனதை பார்த்து அவர் கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அருகே உள்ள சந்தைப்பட்டியை சேர்ந்த பாண்டிச்செல்வத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story