மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x

மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
வங்கிகள் தனியார் மயம்
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட 2 வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை வங்கி ஊழியர்கள் நடத்தினர். இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதன்ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகளில் பண பரிமாற்றம், செக் கிளியரன்ஸ் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். எந்திரங்களில் பொதுமக்கள் பணம் எடுக்க அவதிப்பட்டனர்.
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே மத்திய அரசின் வங்கி தனியார் மய முடிவை கண்டித்து நேற்று கரூர் மனோகரா கார்னர் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ரங்கன் தலைமை தாங்கினார். 
இதில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தேசிய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு நாகராஜ் உள்பட கரூர் நகரில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

Next Story