ஓசூர் அருகே அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது கிராம மக்கள், விவசாயிகள் நிம்மதி
ஓசூர் அருகே அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் நீண்ட நாட்களாக பதுங்கி இருந்தன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து இரவு நேரங்களில் அருகிலுள்ள பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே திருச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்ற பாப்பைய்யா என்கிற விவசாயியை காட்டு யானை ஒன்று கால்களால் மிதித்து கொன்றது. மேலும் 2 பேரை இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. காட்டு யானை தாக்கியதில் இதுவரை 4 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
யானைகளின் தொடர் அட்டகாசத்தால் அச்சம் அடைந்த கிராம மக்கள், விவசாயிகள் அந்த 3 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விவசாயியை கொன்ற காட்டு யானை திருச்சிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. இந்த யானை அந்த பகுதியில் உள்ள கொய்யா தோட்டத்திற்கு வந்து அங்கு, பழங்களை பறித்து தின்றது.
கிராம மக்கள் நிம்மதி
இதையறிந்த வனத்துறையினர், 16 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையை கால்நடை டாக்டர்கள் சரவணன், சுகுமார் ஆகியோர் 3 ரவுண்டு மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை, மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலையில் வனத்துறையினர் நேற்று காலை லாரியில் ஏற்றி உரிகம் அருகே உகுனியம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டு யானை பிடிக்கப்பட்டதால், சானமாவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட யானையை 10 பேர் கொண்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story