பொள்ளாச்சி, வால்பாறையில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.8 லட்சம் பறிமுதல்
பொள்ளாச்சி, வால் பாறையில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.8 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த மளுக்கப்பாறையில் உள்ள போலீஸ் வாகன சோதனை சாவடியில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் கார்த்தி, சசிகுமார், முத்துக்குமார் ஆகியோர் கேரளாவிற்கு செல்வதற்காக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் பயணம் செய்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த நகை வியாபாரிகள் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி,வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை சட்டமன்ற தொகுதியின் தேர்தல் புள்ளியியல் அதிகாரி முத்துவழிவிட்டானிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. நகைக்கடை வியாபாரிகள் கேரள மாநிலத்திலிருந்து மளுக்கப்பாறை வரை வழியில் கேரள பகுதி சோதனை சாவடிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல சோதனை சாவடிகளை கடந்து வந்துள்ளனர்.
ஆனால் தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ள சேக்கல்முடி போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கிபாளையத்தில் வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.53,550 இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் மாநில வரி அலுவலர் சுகுமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது.
தனியார் நிறுவனம் நடத்தி வரும் பாலாஜி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்று உள்ளார். ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் மூடப்பட்டதால், அந்த பணத்தை திரும்ப கொண்டு வரும் போது அதிகாரிகளிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.
இதற்கிடையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story