ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
மதுரை
மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ 3-வது முறையாக தற்போது போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை தாராபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் தொண்டர் சூழ ஊர்வலமாக அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விஜயாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் 2 பேர் மட்டும் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை செயலாளர் தங்கம், பொருளாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார்
திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று காலை திருமங்கலம் குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுடன் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ. சவுந்தர்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் 2 மட்டும் உடன் சென்றனர். அவருக்கு மாற்று வேட்பாளராக ஆர்.பி.உதயகுமாரின் தந்தை போஸ் தேவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாநில பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், பாசறை செயலாளர் ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வி.வி.ராஜன் செல்லப்பா
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சாமி கும்பிட்டு விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். பின்னர் அவர் திருநகர் பகுதியில் இருந்து தொண்டர்கள் சூழ ஊர்வலமாக தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முருகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பாவின் மனைவி மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். அவர்களுடன் அ.தி.மு.க.நிர்வாகிகள் இளைஞரணி செயலாளர் வக்கீல்ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், கருணா ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ராஜன்செல்லப்பாவின் பேத்தி அதிதிமீனாட்சி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
எஸ்.எஸ்.சரவணன்
மதுரை தெற்கு தொகுதி எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. 2-வது முறையாக போட்டியிடுகிறார். நேற்று காலை அவர் அரசமரம் பிள்ைளயார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். பின்னர் எஸ்.எஸ்.சரவணன் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சக்திவேலிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, முத்துஇருளாண்டி, ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் நந்தா, செல்வம், முத்துமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாணிக்கம்
சோழவந்தான் தொகுதியில் மாணிக்கம் எம்.எல்.ஏ. இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை வாடிப்பட்டி பஸ்நிலையம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அங்கிருந்து ஊர்வலமாக சென்றார். பின்னர் அவர் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜஸ்டின்ஜெயபாலிடம் மனுதாக்கல் செய்தார். அவருடன் ரவீந்திரநாத் எம்.பி., ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அய்யப்பன்
உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அய்யப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவர் உசிலம்படடி பணிமனையில் இருந்து ஊர்வலமாக சென்று தேவர்சிலை, பி.கே. மூக்கையாதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அய்யப்பன் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அதிகாரி ராஜ்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமா கே.ராஜாவும் மனு தாக்கல் செய்தார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் ராஜா, பிச்சைராஜன், நிர்வாகிகள் துரைதனராஜன், சுதாகரன், மகேந்திரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியபுள்ளான்
மதுரை மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெரியபுள்ளான் என்ற செல்வம் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை மேலூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக மேலூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் தலைவருமான பொன்னுச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் மோகன்ராம் மற்றும் சிவசாமி ஆகிய சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் அவர்கள் அனைவரும் வேட்பு மனுவுடன், சொத்து மதிப்புகளையும் தாக்கல் செய்தனர். மதுரை மத்தி, கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
Related Tags :
Next Story