வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 3,500 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 3,500 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 16 March 2021 2:07 AM IST (Updated: 16 March 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3,500 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3,500 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
வங்கித்துறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 5 ஊழியர்களுக்கான சங்கங்கள் மற்றும் 4 அதிகாரிகளுக்கான சங்கங்கள் இணைந்து அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தஞ்சை பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
3,500 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் அன்பழகன், வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் சொக்கலிங்கம், அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி குருநாதன், அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மோகனசுந்தரம், சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் விஜயராஜன், வினோத், முருகையன், தீபா, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 500 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தனியார்மயம்
போராட்டம் குறித்து ஊழியர்கள் கூறுகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய மந்திரி நிர்மலாசீத்தாராமன், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாகவும், லைப்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில், அரசின் பங்கை 51-ல் இருந்து 24 ஆக குறைத்துக்கொள்வதாகவும், பொது இன்சூரன்ஸ் துறையில் ஒரு கம்பெனியை தனியார் மயமாக்குவதாகவும், அதற்கான சட்ட திருத்தங்கள் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என அறிவித்ததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
ஏற்கனவே 1969-க்கு முன்பு தனியார் துறையில் இயங்கி வந்த ஏராளமான வங்கிகள் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை எடுத்துக்கொண்டு திவால் அறிவிப்பு கொடுத்ததால் 14 தனியார் துறை வங்கிகள் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டு பொதுத்துறை வங்கிகளாக மாறின. 1980-ல் மேலும் 6 தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட்டன அதன் பின்னர் தான் இந்தியாவின் பொருளாதார முனனேற்றமும், கிராம மக்களுக்கு வங்கிகள் வசதியும், அனைத்து நலத்திட்டங்களும் பொதுத்துறை வங்கிகள் மூலமாக மக்களை அடைந்தன.
வாராக்கடன்
ஆனால் கடந்த 6 வருடங்களாக மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் வங்கிகளிலே பல கோடி ரூபாய்கள் வாராக்கடன் சுமை ஏற்பட்டு வங்கிகளை நஷ்டத்தில் தள்ளின. வாராக்கடன் வசூலுக்கான எந்த தீவிர முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் தனியார் மயமாக்கலை எதிர்த்து இந்த வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 300 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுவது தெரியாமல் ஏராளமான வாடிக்கையாளர்களும் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story