பாளையங்கோட்டையில் பராமரிப்பின்றி காணப்படும் வ.உ.சி. மைதான பூங்கா
பாளையங்கோட்டையில் வ.உ.சி. மைதான பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் செடிகள் கருகின.
நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் செடிகள் கருகியதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வ.உ.சி. பூங்கா
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டையின் மையப்பகுதியில் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ளது வ.உ.சி. விளையாட்டு மைதானம். இந்த மைதானத்தில்தான் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கொடியேற்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதால் இந்த மைதானம் மூடப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தின் வடக்கு பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடைபாதை செல்லக்கூடிய பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகள் உள்ளன. இந்த பூங்காவின் சுற்றுப்பகுதியில் வண்ண அழகிய செடிகளும், சிறிய மரங்களும் வைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரப்பட்டது.
செடிகள் கருகின
இந்த பூங்காவிற்கு தினமும் காலையில் ஏராளமானோர் நடைபயிற்சி செல்வார்கள். மாலையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் குடும்பத்தோடு சென்று தங்களுடைய குழந்தைகளை அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட வைத்து அமர்ந்து இருப்பார்கள். மேலும் அங்கு பழைய இரும்பு பொருட்களை கொண்டு அலங்கார பொருட்கள் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த பூங்கா தற்போது சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்குள்ள மரம், செடிகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்றாமல் அவை வாடி வதங்கி வருகின்றன. சில செடிகள் கருகி விட்டன. இதனை பார்த்து பொதுமக்கள் வேதனை அடைந்தனர். அங்குள்ள மரம், செடிகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். மேலும் பூங்காவையும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story