சென்னிமலை அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னிமலை அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத வழிபாட்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத வழிபாட்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
சென்னிமலை அருகே நஞ்சுண்டாபுரத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புலிங்கமாக தோன்றிய நஞ்சுண்டேஸ்வரருக்கு கண்ணடக்கம், கண் மலர் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வழிபட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பழனி ஆண்டவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நீண்ட வரிசையில்...
இதில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோவில் நிர்வாக அலுவலர் செந்தில் மேற்பார்வையில் எழுத்தர் சரவணன், கோவில் பரம்பரை அறங்காவலர் கே.சுப்பிரமணியம் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊர் பொதுமக்கள் பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட்கள் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் முக கவசம் அணியாத பக்தர்களும் கோவிலுக்குள் சாமி கும்பிட அனுமதிக்கப்படவில்லை.
பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு பங்குனி மாதத்தில் முதல் திங்கட்கிழமை மட்டும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மற்ற திங்கட்கிழமைகளில் வழிபாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story