கோயம்பேடு மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு; போலி முகவரி கொடுத்து விட்டு தப்பியவர்களை கண்டுபிடிக்குமாறு போலீசில் புகார்
கோயம்பேடு மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் அவர்கள் போலியான முகவரியை கொடுத்து விட்டு தப்பியதால், அவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் செய்து உள்ளனர்.
2 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்த கோயம்பேடு மார்க்கெட், நோய் தொற்று குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவர்களின் முகவரிகள், செல்போன் நம்பர்கள் பெறப்பட்டு வருகிறது.
அவ்வாறு கடந்த 11-ந் தேதி பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அளித்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ என வந்துள்ளது. முகவரியும் முறையாக இல்லாமல் கோயம்பேடு மார்கெட் என அரைகுறையாக கொடுத்து இருந்தனர்.
போலீசில் புகார்இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர்.
போலி முகவரி கொடுத்துவிட்டு தப்பிய கொரோனா பாதிப்புக்கு உள்ளான 2 பேரையும் கண்டுபிடித்து தரும்படி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை எடுக்க தொடங்கியிருப்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.