விராலிமலை தொகுதி மக்களுக்காக கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை உழைப்பேன்; அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்
விராலிமலை தொகுதி மக்களுக்காக கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை உழைப்பேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
வாக்குசேகரிப்பு விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர், அன்னவாசல்,விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
விராலிமலை தொகுதி மக்களுக்காக மெழுகுவர்த்தியைப் போல் உருகி பணியாற்றி வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டி உள்ளேன். நான் செல்லும் இடமெல்லாம் நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று மக்கள் கூறுவதை கேட்கும் பொழுது சந்தோஷமாகவும், மன நிறைவாகவும் உள்ளது.
கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை...
நான் என்றும் உங்களுக்காக உழைப்பேன் என் தொகுதி மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை உழைத்து கொண்டே இருப்பேன். ஜெயலலிதாவின் அரசு விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை வழங்கி உள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங்மிஷன், வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள், மாத உதவித் தொகை ரூ.2 ஆயிரம், உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்து உள்ளோம். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து விராலிமலை என்றும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிருபிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் அமைச்சர் விஜயபாஸ்கரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டினர். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
Related Tags :
Next Story