மேம்பால தூண்களின் தாங்கும் திறனை கண்டறிய 1250 டன் மணல் மூட்டைகளை அடுக்கி சோதனை


மேம்பால தூண்களின் தாங்கும் திறனை கண்டறிய 1250 டன் மணல் மூட்டைகளை அடுக்கி சோதனை
x
தினத்தந்தி 16 March 2021 7:36 AM IST (Updated: 16 March 2021 7:36 AM IST)
t-max-icont-min-icon

கோவை-அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான கான்கிரீட் தூண்களின் தாங்கு திறன் கண்டறிவதற்காக 1,250 டன் மணல் மூட்டைகளை அடுக்கி சோதனை செய்யப்படுகிறது.

கோவை

கோவை-அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான கான்கிரீட் தூண்களின் தாங்கு திறன் கண்டறிவதற்காக 1,250 டன் மணல் மூட்டைகளை அடுக்கி சோதனை செய்யப்படுகிறது.

அவினாசி சாலை மேம்பாலம்

கோவை-அவினாசி சாலையில் ரூ.1,600 கோடியில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அவினாசி சாலையின் பல இடங்களில் ஆங்காங்கே கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

இந்த தூண்கள் அமைப்பதற்கு முன்பு 7 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலம் 7 மீட்டர் ஆழத்துக்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் தூண்களுக்கான அடித்தளம் போடப்படுகிறது. 

அதில் தான் பூமி மட்டத்திற்கு மேல் 3 மீட்டர் சுற்றளவிற்கு கான்கிரீட் தூண்கள் கட்டப்படுகின்றன.

தாங்கும் திறன் சோதனை

இந்த கான்கிரீட் தூண்களின் மீது சுமார் 500 டன் எடையுள்ள கான்கிரீட் உத்திரங்கள் வைக்கப்பட்டு அதன் மீது தார் தளம் போடப்படும். அவ்வளவு எடையை கான்கிரீட் தூண்கள் தாங்குமா என்பதற்கான சோதனை செய்யப்படுவது வழக்கம். 

இதற்காக கோவை சிட்ரா அருகில் அவினாசி சாலையில் பூமிமட்டம் அளவுக்கு கான்கிரீட் தூணுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு அதன் மீது மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. 

ஒரு மணல் மூட்டையின் எடை 50 கிலோ வீதம் 1,250 டன் எடைக்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தாங்கும் திறன் சோதிக்கப்படும். மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒரு இடத்தில் நடத்தினால் போதும் 

மேம்பாலம் கட்டப்படும் அனைத்து பகுதிகளிலும் கான்கிரீட் தூண்களின் தாங்கும் திறன் சோதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தான் இந்த சோதனையும் நடத்தப்படுகிறது. 

இவ்வளவு குறிப்பிட்ட சுற்றளவு உள்ள கான்கிரீட் தூணில் இவ்வளவு தடிமன் கம்பி பயன்படுத்தினால் இவ்வளவு எடையுள்ள பாரத்தை தாங்க வேண்டும் என்ற கணக்கு உண்டு. 

அந்த கணக்கின்படி கட்டப்படும் கான்கிரீட் தூண் 1,250 டன் எடையை தாங்குமா? என்று சோதனை நடத்தப்படுகிறது. இதுபோன்ற சோதனை கான்கிரீட் தூண்கள் அமைக்கும் எல்லா இடங்களிலும் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஏதாவது ஒரு இடத்தில் நடத்தினால் போதுமானது. 

ஆய்வு 
இதற்கு பக்கவாட்டில் அதிக இடம் வேண்டும். 12 மீட்டர் அகலத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க வேண்டும். இதற்காக சிட்ரா பகுதி தேர்வு செய்யப்பட்டு அங்கு சோதனை நடத்தப்படுகிறது. 

1,250 டன் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி ஓரிரு நாளில் முடிவடையும். அந்த மணல் மூட்டைகள் முழுவதும் சில நாட்கள் அப்படியே இருக்கும். அப்போது கான்கிரீட் தூண் பூமியில் இறங்குகிறதா? என்று ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story