‘தண்ணீர் இ்ல்லாத ஊரில் வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்கள்’ கமல்ஹாசன் விமர்சனம்


‘தண்ணீர் இ்ல்லாத ஊரில் வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்கள்’ கமல்ஹாசன் விமர்சனம்
x
தினத்தந்தி 16 March 2021 7:37 AM IST (Updated: 16 March 2021 7:37 AM IST)
t-max-icont-min-icon

‘தண்ணீர் இ்ல்லாத ஊரில் வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்கள்’ என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார்.

கோவை

‘தண்ணீர் இ்ல்லாத ஊரில் வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்கள்’ என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார்.

பொதுக்கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று அவர் கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக மண், மொழி, மக்கள் காக்க என்ற பெயரில் நேற்று மாலை கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பேசும்போது கூறியதாவது:-
உயிரே உறவே தமிழே வணக்கம். கோவையில் ஏன் போட்டி என கேட்கின்றனர். நான் ஏன் போட்டியிட கூடாது. 234 தொகுதிகளிலும் என் உறவுகள் இருக்கின்றனர். 

ஆரம்பத்தில் இருந்தே ஒரு சாதி, மத பிரிவில், நாத்திகன் என அடைக்க முயன்றார்கள். மயிலாப்பூரில் என் உறவினர்கள் இருக்கின்றனர். அங்கு நிற்பேன் என்றார்கள்.

வாஷிங்மிஷின்

மக்கள் சேவைதான் அரசியல். 40 ஆண்டுகளாக செய்த நற்பணிகள் எல்லாம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றது. அந்த விதை நான் போட்டது. தேர்தலுக்கு பிறகு நடிக்க போயிடுவேன் என்கின்றனர். நடிப்பு என் தொழில்.

 உங்களுக்கு அரசியல் தான் தொழில். இந்த வித்தியாசத்தால் நீங்கள் தோற்க போகின்றீர்கள். நாங்கள் ஜெயிக்க போகின்றோம். 33 சதவீத கிரிமினல்கள் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்றனர்.

இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயர் கோவைக்கு இருந்தது. முதலில் ஆட்சியில் இருந்தவர்கள் மின் வெட்டால் தொழில்களை வேறு மாநிலத்திற்கு ஓடிவிடும்படி செய்தார்கள். அடுத்து ஆட்சியில் இருந்தவர்கள் கடனை ரூ.7 லட்சம் கோடியாக மாற்றி இருக்கின்றனர்.

தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஆளும் தகுதியும், தன்மையும் இல்லை. ஆட்சியாளர்கள்  தங்கள் கல்லா பெட்டியை நிரப்புகின்றனர்.

கொங்கின் சங்கநாதம்

எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் சாதனையாளர்கள். கொங்கின் சங்கநாதம் கோட்டையில் ஒலிக்க வேண்டும். அதை ஒலிப்பவன் நானாக இருக்க வேண்டும். சினிமா துறையில் செய்த மாற்றத்தை கோவை தெற்கு தொகுதியிலும் செய்து காட்டுவேன். 

கோவை எங்கள் கோட்டை என சிலர் சொல்லி கொண்டு இருக்கின்றனர். இல்லை என்று சொல்லுங்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் உங்கள் தொகுதியில் வந்து குறைகளை கேட்டறிந்து எவ்வளவு நாட்களில் நிறைவேற்றுவோம் என்று ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போடுவார்கள்.

3-வது அணி வெற்றி பெற்றதில்லை என்கிறார்கள். எம்.ஜி.ஆரும் 3-வது அணியாக இருந்துதான் வெற்றி பெற்றார். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் துணைத் தலைவர் மகேந்திரன், பழ.கருப்பையா, மாநில தேர்தல் பரப்புரை செயலாளர் அனுஷா ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதலாக 2 இடங்கள்

தொடர்ந்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 2 இடங்கள் ஒதுக்கீடு செய்வதாக கமலஹாசன் அறிவித்தார். அதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் செரீப்பை நிறுத்துகிறேன் என்றும் தெரிவித்தார்.

Next Story