நீலகிரியில் ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
நீலகிரியில் ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
ஊட்டி
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நீலகிரியில் ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டியில் உள்ள ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன.
போராட்டம் குறித்து தெரியாத வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து, அவை மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
ஊட்டி ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து இந்திய வங்கி ஊழியர் மற்றும் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அலுவலர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் சாம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.கூடலூர் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டது.
இதனால் பணபரிவர்த்தனைகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பண பரிவர்த்தனை பாதிப்பு
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் பூஜ்யம் பணத்தில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும். இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் 52 வங்கிகள் மூடப்பட்டன. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் மூலம் நடைபெறும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ.100 கோடி வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story