அப்பர்பவானி வனப்பகுதியில் காட்டுத்தீ
அப்பர்பவானி வனப்பகுதியில் காட்டுத்தீ
ஊட்டி
அப்பர்பவானி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
உறைபனி தாக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் கருகியும், மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்தும் கிடந்தன.
இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருந்ததால், வனத்துறையினர் தீத்தடுப்பு கோடு அமைத்து கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் மஞ்சூர் அருகே அப்பர்பவானி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. புல்வெளி, செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
உடனடியாக தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து வனத்துறையினருடன் அதிரடி படையினரும் சேர்ந்து தீயை அணைக்க போராடினர்.
அங்கு அதிரடிப்படை முகாம் அருகே தீ பரவியதால் சுற்றி உள்ள செடி, கொடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, முகாமுக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் அப்பர்பவானி வனப்பகுதியில் மின்வாரிய குடியிருப்பு அருகே காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கு அணை சீரமைப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கி உள்ளதோடு, பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.
5 ஏக்கருக்கும் மேல் நாசம்
உடனே தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பை சுற்றிலும் பரவிய காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். காட்டு தீயால் 5 ஏக்கருக்கும் மேலான வனப்பகுதிகள் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளதால் வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் சிகரெட் பிடித்து விட்டு கீழே போடக்கூடாது. சுற்றுலா பயணிகள் அடுப்பு வைத்து சமையல் செய்யக்கூடாது. காட்டுத்தீ ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story