வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம், பரிசு பொருள் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் தேர்தல் அதிகாரி செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம், பரிசு பொருள் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி செந்தில்ராஜ அறிவுறுத்தி உள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம், பரிசு பொருள் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வ.உ.சி. கல்லூரி நிர்வாகம் மற்றும் மந்திதோப்பு பகுதியில் உள்ள திருநங்கைகள் ஆகியோர் இணைந்து தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கி வாக்காளர் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
வாக்களிக்க..
பின்னர் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் வாங்காமல் ஜனநாயக விதிமுறையின்படி வாக்களிக்க வேண்டும். எனவே அனைத்து பொதுமக்களும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். ஓட்டு நமது உரிமை, உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது” என்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சதீஸ்குமார், கல்லூரி முதல்வர் வீரபாகு, தாசில்தார் ஜஸ்டின், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவர்கள், திருநங்கைகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story