கயத்தாறு அருகே அரசன்குளத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் விவசாய நிலத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு
கயத்தாறு அருகே அரசன்குளத்தில் விவசாய நிலத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அரசன்குளத்தில் விவசாய நிலத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான அரசன்குளம் 6-வது வார்டு பகுதியில் கிராம மக்கள் விவசாய நிலங்களில் வேலை பார்த்து வருவதுடன், ஆடு மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் விவசாயம் செய்து வரும் பகுதியில், அதாவது மேட்டு பிராஞ்சேரி பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கல்குவாரி புதிதாக அமைத்து வருகின்றனர். இந்த குவாரிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்குவாரி அமைக்கும் முயற்சியை கைவிடுவதுடன், ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என விவசாயிகள் கூறிவருகின்றனர்். மேலும், கல்குவாரி அமைக்கப்பட்டால், இப்பகுதியில் விளையும் விவசாய பொருட்கள் அனைத்தும் வீணடிக்கப்படும், அதில் ஏற்படும் புகை மண்டலத்தால் எந்த பயிர்களும் விளைச்சல் செய்ய முடியாது. எனவே இந்த பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் பல முறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதை தொடர்ந்து நேற்று குவாரி அமைக்கப்படும் பகுதியில் தமிழ்நாடு தமிழ் விவசாய சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையிலும், ஊர்நாட்டாமை ஆண்டி, முருகன் கோமதி, முன்னாள் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் வடிவேல் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் பேச்சுவார்த்தை
தொடர்ந்து கிராம மக்களும், விவசாயிகளும், தங்களது ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு உள்பட அனைத்து அரசு அட்டைகளையும் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க திரண்டு வந்தனர்.
இதை அறிந்த தாசில்தார் பேச்சிமுத்து கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கிராம மக்களுடன் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அந்த இடத்தை முறையாக சர்வே செய்து பட்டா நிலமா?, அல்லது அரசு புறம்போக்கு நிலமா?, ஓடைபிரம்போக்கா? ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story